இரட்டை இலை சின்னம் யாருக்கு?- அக்.31-க்குள் முடிவெடுக்க வேண்டும்: தேர்தல் ஆணையத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

0
17
இரட்டை இலை சின்னம் யாருக்கு?- அக்.31-க்குள் முடிவெடுக்க வேண்டும்: தேர்தல் ஆணையத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
இரட்டை இலை சின்னம் யாருக்கு?- அக்.31-க்குள் முடிவெடுக்க வேண்டும்: தேர்தல் ஆணையத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது குறித்து அக்டோபர் 31-க்குள் தேர்தல் ஆணையம் முடிவெடுக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதிமுகவில் பெரும்பான்மை பெற்றுள்ள அணிக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கக் கோரி திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன், உயர் நீதிமன்ற கிளையில் பொது நலன் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. இதில் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

அதிமுகவின் இரு பிரிவுகளும் இரட்டை இலை சின்னத்துக்கு உரிமை கோரி தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்துள்ளன. கூடுதல் பிரமாணப் பத்திரங்கள் தாக்கல் செய்வதற்கு இரு பிரிவுகளுக்கும் மேலும் அவகாசம் வழங்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இருப்பினும் இதுவரை இரு பிரிவினரும் ஆவணங்களை தாக்கல் செய்யாமல் இழுத்தடித்து வருகின்றனர்.

தமிழகத்தில் நவ.17-ம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்த உயர் நீதிமன்றத்தின் முதல் அமர்வு உத்தரவிட்டுள்ளது. இந்த சூழலில் சின்னம் ஒதுக்கீடு செய்வதில் மேலும் தாமதம் ஏற்பட்டால் கட்சிகளின் அரசியல் நடவடிக்கையில் பாதிப்பு ஏற்படும். தேர்தல் ஆணையம் மனுக்கள் மீது விரைவில் முடிவெடுக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது.

உத்தரப்பிரதேசத்தில் பொதுத்தேர்தலின்போது சமாஜ்வாடி கட்சியில் பிளவு ஏற்பட்டது. அப்போது சின்னம் ஒதுக்கீடு தொடர்பான மனு மீது தேர்தல் ஆணையம் விரைவில் முடிவு எடுத்தது. இரட்டை இலை சின்னத்துக்கு உரிமை கோரிய மனு மீது முடிவு எடுப்பதில் தாமதம் ஏற்படுவதற்கு அதிமுகவின் இரு அணிகள் தான் காரணம் என்பது உண்மை. அதேநேரத்தில் இதை ஒரு காரணமாக வைத்து சின்னம் ஒதுக்கீட்டில் முடிவு எடுக்க தாமதம் செய்யக்கூடாது.

உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்புக்கு முன்பே இரட்டை இலை சின்னம் ஒதுக்கீட்டில் தேர்தல் ஆணையம் முடிவெடுக்க வேண்டும். அதிமுகவின் இரு அணிகளும் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பிரமாணப் பத்திரங்கள் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, சட்டப்படியும், தகுதி அடிப்படையிலும் விசாரணை நடத்தி அக். 31-ம் தேதிக்குள் தேர்தல் ஆணையம் இறுதி முடிவெடுக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here