ஆன்மிகம் என்ற வார்த்தையை ரஜினி அரசியலில் பயன்படுத்துவது தவறாகத்தான் போய் முடியும் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

ஆர்.கே நகர் சட்டமன்ற உறுப்பினர் டிடிவி தினகரன் சென்னை அடையாறில் உள்ள அவரது இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

”விசாரணை ஆணையத்தில் கேட்டுக்கொண்டதின் பேரில் வீடியோ ஆதாரத்தை கொடுத்துள்ளோம். ஏற்கெனவே வெற்றிவேல் கொடுத்ததின் தொடர்ச்சிதான் தற்போது கொடுத்துள்ளோம்.

நடிகர் ரஜினிகாந்த் ஆன்மிகம் என்று சில வார்த்தைகள் பேசி உள்ளார், ஆன்மிகம் என்ற வார்த்தையை அரசியலில் பயன்படுத்துவது தவறாகத்தான் முடியும். தனி நபர் தன்னை ஒழுங்குபடுத்தி கொள்வதற்குத் தான் ஆன்மிகமே தவிர அரசியலுக்கு அது ஏற்புடையது அல்ல.

ரஜினி சிஸ்டம் சரியில்லை என்கிறார். சிஸ்டம் எப்போதுமே சரியாகத்தான் இருக்கிறது. நடைமுறைப்படுத்துவதுதான் தவறாக இருக்கும்.

மாநில சுயாட்சிக்கே கேடு விளைவிக்கும் விதமாக மத்திய அரசு இந்திய மருத்துவ கவுன்சிலை கலைத்து தேசிய மருத்துவ ஆணையத்தை உருவாக்க முயற்சிக்கின்றது.

சட்டசபைக்கு சென்றால் எம்.எல்.ஏ என்ற முறையில் கதிராமங்கலம், நெடுவாசல் போன்ற மக்களின் பிரச்சினைகளை எடுத்துரைப்பேன்.

முத்தலாக் விவகாரத்தில் இஸ்லாமிய பெண்களுக்கு உண்மையாகவே உதவி செய்ய வேண்டும் என்றால் ஒவ்வொரு மாநிலத்தின் இஸ்லாமிய அமைப்பைச் சார்ந்தவர்களை கலந்து ஆலோசித்துதான் முடிவெடுக்க வேண்டும்.

பெண்களுக்கு 80 சதவிகிதம் கூட இட ஒதுக்கீட்டைக் கொண்டு வரலாம், ஆனால் மத்திய அரசு இதையெல்லாம் செயல்படுத்தாது.

மார்ச் மாதத்திற்குள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் வழக்கில் நல்ல தீர்ப்பு வரும் என்று எதிர்பார்க்கின்றேன்.”

இவ்வாறு தினகரன் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here