தொண்டர்கள் ரகசியமாக குறைகளை சொல்ல வாய்ப்பு: புகார் பெட்டி தயார்; மு.க.ஸ்டாலின் தலைமையில் குழு

0
23

பிப்ரவரி 1 அன்று திமுக தொண்டர்கள் குறைகளை ரகசிய கடிதமாக தெரிவிக்க வாய்ப்பளிக்கப்படுகிறது. கடிதங்களை மு.க.ஸ்டாலின் தலைமையிலான குழு ஆய்வு செய்ய போகிறது.

ஊடகங்களின் கருத்துகளும், கணிப்புகளும் திமுகவை மையப்படுத்தியே வெளியிடப்படுகின்றன. “எல்லா சாலைகளும் ரோம் நகரை நோக்கியே” என்பதைப்போல, எல்லாருடைய கண்ணும் – கருத்தும் நம்மை நோக்கியே இருக்கின்றன.

கட்சியின் ஜனநாயகப் பாதையில் ஏற்படும் சிறுசிறு தடைகளை அகற்றி, வழக்கம்போல விரைந்து பயணித்து, வெற்றி இலக்கினை அடைவதற்கு ஏதுவாக, தடைக்கற்களின் அளவும் இயல்பும் என்ன, அணிவகுத்து விரைந்து செல்ல ஒவ்வொரு பகுதியிலும், ஒவ்வொரு கட்டத்திலும் எந்தமாதிரியான உத்திகளைக் கையாள வேண்டும் என்பன போன்றவற்றைக் கலந்தாலோசித்து வடிவமைத்துக் கொள்வதற்காகவே, பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் களஆய்வு திட்டமிடப்பட்டு, கட்சித் தலைமையால் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் அடிக்கடி நேரில் வந்து கட்சி நிர்வாகிகளையும், தோழர்களையும் சந்திக்கக்கூடிய அரிய வாய்ப்பை உங்களில் ஒருவனான நான், கட்சியின் செயல்தலைவர் என்ற முறையில் தொடர்ந்து உருவாக்கிக் கொண்டிருந்தாலும், இந்தமுறை கட்சியின் தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் உங்களை அழைத்து உரையாடவும், அதன்வழியே கட்சியை மென்மேலும் வலிமைப்படுத்திக் கூர்மைப்படுத்தும் ஆக்கப்பூர்வமான பணிகளை மேற்கொள்ளவும் ஆர்வமாக இருக்கிறேன்.

வருகின்ற பிப்ரவரி 1 ஆம் தேதி இந்தக் களஆய்வு தொடங்குகிறது. மாவட்டவாரியாக ஒவ்வொரு நாளும் நடைபெறவுள்ள களஆய்வில், கட்சியின் ஆணிவேருக்கு முறையாக நீர்பாய்ச்சி, உரமூட்டவதற்கான ஆலோசனைகளைப் பெறுவதற்குத் தயாராக இருக்கிறேன். திராவிட இயக்கம் என்பது ஆயிரங்காலத்துப் பயிர். அதனைக் கண்ணும் கருத்துமாகப் பாதுகாக்க வேண்டிய கடமை நம் ஒவ்வொருவருக்கும் உள்ளது.

கட்சித்தலைமை வெளியிட்டுள்ள அட்டவணையின் அடிப்படையில், ஒவ்வொரு மாவட்டத்தைச் சார்ந்த ஊராட்சிச் செயலாளர்கள், பேரூர் செயலாளர்கள், வட்டச்செயலாளர்கள், அந்தந்த மாவட்டத்தில் உள்ள துணை அமைப்புகளுடைய அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் என்ற வரிசையில் சந்திப்பு நடைபெற்ற பிறகு, ஒன்றிய – நகர – பகுதி கழக செயலாளர்கள், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகளுடனான சந்திப்பும் கலந்துரையாடலும் நடைபெறவிருக்கிறது.

கட்சியின் நலன் பெருக்கும் இந்தக் களஆய்வின் போது, நீங்கள் பொறுப்பு வகிக்கும் பகுதியில், அதிலும் உங்கள் மாவட்டத்தில் உள்ள கட்சியின் நிலையைப் பற்றித் தெரிவிக்க விரும்பும் புகார்கள் / கருத்துகள் / ஆலோசனைகளை எல்லாம் சிறுகடிதமாக எழுதி, களஆய்வு நடக்கும் இடத்தில் வைக்கப்படும் பெட்டியில் போடலாம். அந்தக் கடிதங்களை ஆய்வு செய்ய, என்னுடையக் கட்டுப்பாட்டில் குழு அமைக்கப்படும்.

பொதுத்தேர்தலின்போது வாக்குப்பெட்டியில் சேரும் வாக்குகள் எப்படி தேர்தல் முடிவுகளைத் தீர்மானிக்கின்றனவோ அதுபோல, அந்தப் பெட்டியில் போடப்படும் கடிதங்களில் தெரிவிக்கப்பட்டிருக்கும் கருத்துகளின் அடிப்படையில், கட்சியின் வளர்ச்சிக்குத் தேவையான ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளையும், அவசியமாகச் செய்ய வேண்டிய அறுவை சிகிச்சை முறைகளையும் நிச்சயம் மேற்கொள்வேன் என்ற உறுதியினை அளிக்கிறேன்.

எழுத்து மூலமாக மட்டுமின்றி, பேச்சு மூலமாகவும் கருத்துகளைத் தெரிவிப்பதற்கு இந்தக் களஆய்வு சந்திப்பில் வாய்ப்பளிக்கப்படும். நிறைகள் – குறைகள் – நெஞ்சில் நிறைந்திருக்கும் உணர்வுகள் இவற்றையெல்லாம் நேரடியாக எடுத்துச் சொல்வதற்கும், பல நெருப்பாறுகளை நீந்தித் கருணாநிதி பாதுகாத்து வைத்திருக்கும் எஃகுக் கோட்டையான கட்சியை அதே வலிமையுடன், அவரது அன்பு உடன்பிறப்புகளான நாம் எல்லோரும் தொடர்ந்துப் பாதுகாத்திட வேண்டும்.

எதிர்காலத்தில் நாம் செய்ய வேண்டிய கட்சிப் பணிகள் குறித்தும், அதற்கான செயல்திட்டங்களை உருவாக்குவதற்கும் இந்தக் களஆய்வு துணை நிற்க வேண்டும். உள்ளாட்சித் தேர்தலில் தொடங்கி நாடாளுமன்ற – சட்டமன்ற தேர்தல்கள் அடுத்தடுத்து வரிசையாக வரவிருக்கின்றன. போராட்டக் களங்களிலும், தேர்தல் களங்களிலும் வெற்றி பெறுவதற்கான கால்கோள் நிகழ்வாக கட்சியின் களஆய்வு அமையட்டும்.

காத்திருக்கிறேன் உங்கள் அனைவரையும் காண. உங்களில் ஒருவனாக”

இவ்வாறு கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here