பல்வேறு போட்டிகளில் பதக்கங்கள் பெற்ற 29 விளையாட்டு வீரர்களுக்கு:ரூ.2.25 கோடி ஊக்கத் தொகை – முதல்வர் கே.பழனிசாமி வழங்கினார்

0
12

தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள், மகளிர் உலகக் கோப்பை வாள்வீச்சு போட்டிகளில் பதக்கங்கள் வென்ற 29 வீரர்களுக்கு ரூ.2.25 கோடி ஊக்கத்தொகையை முதல்வர் கே.பழனிசாமி வழங்கினார்.

இது தொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

சிறந்த விளையாட்டு வீரர்கள் மேலும் பல சாதனைகள் புரிய உதவித் தொகை, பதக்கம் வெல்லும் வீரர்களின் பயிற்றுநர்களை ஊக்குவிக்கும் வகையில் ஊக்கத் தொகை வழங்கும் திட்டங்கள் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த 2016-ல் குவாஹாட்டி, ஷில்லாங்கில் நடந்த 12-வது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த 28 வீரர்கள், வீராங்கனைகளுக்கு உரிய ஊக்கத் தொகையாக ரூ.1 கோடியே 92 லட்சத்துக்கான காசோலைகளை தலைமைச் செயலகத்தில் முதல்வர் கே.பழனிசாமி நேற்று வழங்கினார். வீரர்களின் பயிற்றுநர்கள் 21 பேருக்கு ஊக்கத் தொகையாக ரூ.28 லட்சத்து 80 ஆயிரமும் வழங்கப்பட்டது.

இதுதவிர 2017-ம் ஆண்டு ஐஸ்லாந்து நாட்டில் நடந்த மகளிருக்கான உலகக் கோப்பை சாட்டிலைட் வாள்வீச்சு போட்டிகளில் முதலிடம் பெற்ற சி.ஏ.பவானி தேவிக்கு சிறப்பினமாக ரூ.5 லட்சத்துக்கான காசோலையும் வழங்கப்பட்டது.

இந்திய பள்ளி விளையாட்டுக் குழுமத்தின் வாயிலாக பள்ளிகளுக்கான மாநில அளவில் சிறந்த ஸ்குவாஷ் விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள், மகாராஷ்டிர மாநிலம் அவுரங்காபாத்தில் கடந்த டிசம்பர் 5 முதல் 9 வரை நடந்த தேசிய அளவிலான குழு மற்றும் தனிநபர் பிரிவு ஸ்குவாஷ் போட்டியில் பங்கேற்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தையும் வென்றனர். இப்போட்டியில் பதக்கங்கள் வென்ற 25 விளையாட்டு வீரர்களும் வீராங்கனைகளும் தலைமைச் செயலகத்தில் முதல்வர் கே.பழனிசாமியை சந்தித்து கோப்பைகளை காட்டி வாழ்த்து பெற்றனர்.

இந்நிகழ்ச்சியில், அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி, சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், இளைஞர் நலத்துறை செயலாளர் தீரஜ்குமார், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ரீட்டா ஹரீஷ் தாக்கர் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here