ப.சிதம்பரம் குடும்பத்தினருக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்: ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவு

ப.சிதம்பரம் குடும்பத்தினருக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்: ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவு

ப.சிதம்பரம் உள்ளிட்ட அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு வருமான வரித்துறை அனுப்பிய நோட்டீஸை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், அவரது மனைவி நளினி, மகன் கார்த்தி, மருமகள் ஸ்ரீநிதி ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தனர். அந்த மனுவில் கர்நாடகா மாநிலம், குடகு மாவட்டத்தில் உள்ள கூர்க் என்ற இடத்தில் 200 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள எஸ்டேட்டில் விளையும் காபிக் கொட்டை, மிளகு உள்ளிட்ட விவசாய பொருட்களை விற்பனை செய்வதன் மூலம் வருமானம் கிடைப்பதாக கூறியுள்ளனர்.

loading...

விவசாயத்தின் மூலம் கிடைக்கும் வருமானத்துக்கு, வருமான வரிச் சட்டம் பிரிவு 10(1)-ன் படி வரிச்சலுகை வழங்கப்படுவதால் கடந்த 2010-11 ஆம் ஆண்டுக்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்யும்போது இந்த விவசாய வருமானத்தைக் காட்டி வரிச்சலுகையை பெற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

இந்தக் கணக்கை மறுஆய்வு செய்ய வேண்டும் என்றும் அந்தக் கணக்கு ஆவணங்களுடன் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் வருமான வரித்துறை உதவி கமிஷனர் ப.சிதம்பரம் உள்ளிட்ட நால்வருக்கும் கடந்த ஆண்டு நோட்டீஸ் அனுப்பியது. அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாகவும், துன்புறுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் மத்திய அரசு 7 ஆண்டுகளுக்கு பிறகு அனுப்பியுள்ளதாகவும், அதனை ரத்து செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி டி.எஸ்.சிவஞானம் பிறப்பித்த உத்தரவில், மனுதாரர்கள் வேண்டும் என்றே வருமானத்தை மறைத்தார்கள் என்ற குற்றச்சாட்டு ஏதும் இல்லை. இவர்களின் கணக்குகளை அப்போதைய அதிகாரி ஆய்வு செய்துள்ளார். விவசாயம் மூலம் கிடைக்கும் வருமானத்துக்கு முழு வரி விலக்கு உள்ளது என்பதை அவர் முடிவு செய்துள்ள நிலையில் மீண்டும் ஆய்வு செய்யவேண்டும் என்பது ஏற்றுக்கொள்ள முடியாது.

மேலும் வருமான வரித்துறை அனுப்பிய நோட்டீஸ் பாரபட்சமானது என்றும், சட்டவிரோதமானது என்றும் தீர்மானிப்பதாகவும், அதனடிப்படையில் ப.சிதம்பரம் உள்ளிட்ட நால்வருக்கு அனுப்பப்பட்ட சம்மனை ரத்து செய்வதாக உத்தரவிட்டுள்ளார்.

loading...

LEAVE A REPLY