ரயில்வே துறையை தனியார் மயமாக்குவதா?- வாசன் கண்டனம்

ரயில்வே துறையை தனியார் மயமாக்குவதா?- வாசன் கண்டனம்

ரயில்வே நிலங்கள் தனியாருக்கு விற்பனை செய்யப்பட உள்ளதன் மூலம் ரயில்வே துறையை தனியார் மயமாக்கும் முயற்சி தொடங்கப்பட்டுள்ளது. இதை தமாகா எதிர்ப்பதாக ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஜி.கே. வாசன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ”மத்திய பாஜக அரசு ரயில்வேயில் அந்நிய நேரடி முதலீட்டிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் முயற்சி, சுமார் 403 ரயில் நிலையங்களை சுற்றியுள்ள சுமார் 2,700 ஏக்கர் ரயில்வே நிலங்களை கார்ப்பரேட்டுகளுக்கு தாரை வார்த்து தனியார் மயமாக்கும் முயற்சியில் ஈடுபட உள்ளது.

loading...

விவேக் தேப்ராய் கமிட்டியின் பெயரால் ரயில்வே துறையின் கீழ் உள்ள ரயில் உற்பத்தி பிரிவுகள், ஒர்க் ஷாப்கள், மருத்துவமனைகள், பள்ளிகள், கட்டுமானப் பணிகள் போன்றவற்றை தனியாருக்கு தாரை வார்க்கும் திட்டம் ஆகியவை ஒரு போதும் ஏற்புடையதல்ல.

எனவே மத்திய அரசே ரயில்வே துறையை தனது முழுக் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்வதோடு, தனியார் மயமாக்கும் முயற்சியை கைவிட வேண்டும். குறிப்பாக ரயில்வேயில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும். மேலும் ரயில்வே துறையின் கீழ் செயல்படுகின்ற அச்சகங்கள் உள்பட பல்வேறு பிரிவுகளை தொடர்ந்து செயல்படுத்த வேண்டிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

ரயில்வே பணிமனைகளில் தொழிலாளர்களின் அத்தியாவசிய தேவையான சுத்தமான குடிநீர், சுகாதாரமன கழிவறை, பெண்களுக்கான வசதிகள் பொருந்திய ஓய்வறைகள் போன்றவற்றில் உள்ள குறைகளை நீக்க அதிக கவனம் செலுத்த வேண்டும்.

ரயில்களை பராமரிப்பதற்கும், பழுதுபார்ப்பதற்கும் தேவையான தரமான உதிரிபாகங்கள் வழங்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டும் நிலவுகிறது. இதனை சரிசெய்ய வேண்டியது மத்திய ரயில்வே துறையின் கடமை. ரயில்வேயில் வழங்கப்படுகின்ற குறைந்த பட்ச சம்பளம் 18 ஆயிரத்தை 26 ஆயிரமாக உயர்த்த வேண்டும் என ரயில்வேயில் பணிபுரியும் பணியாளர்கள் நீண்ட காலமாக கோரிக்கை வைக்கின்றனர்.

மேலும் புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்சன் திட்டத்தையே கொண்டுவர வேண்டும் எனவும் ரயில்வே ஊழியர்கள் வலியுறுத்துகின்றனர். எனவே மத்திய பாஜக அரசு ரயில்வேயை தனியார் மயமாக்கும் முயற்சியை கைவிட்டு, ரயில்வே துறையை லாபகரமாக இயக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு, ரயில்வே பணியாளர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றி ரயில்களை பயணிகளின் பாதுகாப்பான போக்குவரத்துக்கு பயன்படுத்திட வேண்டும்” என்று வாசன் கூறியுள்ளார்.

loading...

LEAVE A REPLY