உயர்கல்வித்துறையில் நடக்கும் அவலங்கள்!

0
15
உயர்கல்வித்துறையில் நடக்கும் அவலங்கள்!
உயர்கல்வித்துறையில் நடக்கும் அவலங்கள்!

உயர் கல்வித் துறையானது உயர் லஞ்சத் துறையாக மாறியிருப்பதைக் கோவை பாரதியார் பல்கலைக்கழகத் துணைவேந்தரின் கைது நடவடிக்கை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்துள்ளது. நிரந்தரப் பணியிடங்களுக்கு மட்டுமல்லாமல் கௌரவ விரிவுரையாளர் மற்றும் மணி நேர விரிவுரையாளர் பணிகளுக்கும்கூட லட்சக் கணக்கில் லஞ்சம் பெறப்படுவதுதான் அதிர்ச்சிதரும் உண்மை.

தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரிகளுக்கு மணி நேர அடிப் படையில் விரிவுரையாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இவர்களுக்கு மாத ஊதியம் கிடையாது; எத்தகைய பணி வரன்முறையும் கிடையாது. ‘பருவத் தேர்வுகள் தொடங்கும் போது வர வேண்டாம்’ என்று வேலையைவிட்டு நிறுத்திவிடுவர். ஒரு பருவம் தான் (ஐந்து மாதங்கள்தான்) இப்பணிக்கு அதிகபட்ச உத்தரவாதம். ஒரு நாளைக்குச் சராசரி யாக ரூ.250 வீதம் வாரத்தின் 5 வேலை நாட்களுக்கு ரூ.1,250. இந்த அடிப்படையில் அவர்கள் அதிகபட்சமாக ஒரு மாதத்துக்கு ரூ.5,000 பெற்றாலே அது மிகக் கூடுதல்தான். இப்பணிக்கு விரிவுரையாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவதிலும்கூட லஞ்சம் புரையோடிப் போயிருக்கிறது.

இதுதான் தேர்வு நடைமுறை

முதலில், மணி நேர விரிவுரையாளர் பணியிடத்துக்கு விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும்போது பல்கலைக்கழகத்தின் எந்த உறுப்புக் கல்லூரிக்கு விண்ணப்பிக்கிறோம் என்று குறிப்பிட வேண்டும். இது பூர்வாங்கப் பணி. இது முடிந்தவுடன் ஒரு பணி யிடத்துக்கு ரூ. 2 லட்சம் கேட்கின்றனர் என்ற செய்தி காற்றில் தானாகப் பரவவிடப்படும். பல்கலைக்கழகத்தின் அடிமட்ட ஊழியர்களிடமிருந்து இச்செய்தி முதலில் காற்றுவாக்கில் வரும். இதைக் கேள்விப்பட்டவுடன் விண்ணப்பித்தவர்கள் பணம் கொடுத்தால்தான் வேலை போலும் என்ற மனநிலைக்கு வரவழைக்கப்படுவர். யாரைத் தொடர்புகொள்வது, யாரிடம் பணம் கொடுப்பது, பணம் கொடுத்தால் வேலை உறுதியா என்று தங்களுக்குள்ளே கேட்டுக்கொள்வர். பின்னர், வழிமுறைகள் அவர்களை வந்தடையும்.

பல்கலைக்கழக அலுவலக ஊழியர், அவருக்கு நம்பகமான அலுவலக அதிகாரி, அவருக்கு நம்பகமான நிர்வாக அதிகாரிகள், அவருக்கு நம்பகமான பேராசிரியர்கள் என ஒரு வட்டம் இருக்கும். இதுபோல் பல வட்டங்கள் இருக்கும். அந்த வட்டத்தினர் மேற்படி பணியிடத்துக்கு ரூ. 1.5 லட்சத்திலிருந்து ரூ. 3.5 லட்சம் வரை பெற்றுக்கொண்டு பணிகள் வழங்குவார்கள். அந்தப் பணத்தை வழிப்பறி கொள்ளையர்போல் வந்து ஒருவர் பெற்றுக்கொண்டு செல்வார்.

இதற்குப் பின்னர் நேர்முகத் தேர்வு நாள் குறிக்கப்படும். விண்ணப்பித்தவர்கள் அனைவரும் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர். மணி நேர அடிப்படையில் விரிவுரையாளர் பணிக்குத் தேர்ந்தெடுப்பதிலேயே இவ்வளவு லஞ்சம் வாங்கப்படுகிறது என்றால், உதவிப் பேராசிரியர் பணிக்கு இதே முறையில் பத்து மடங்கு அதிகமாக வசூலிக்கப்படுகிறது.

புதுச்சேரி சொல்லும் பாடம்

புதுச்சேரியில் சமீபத்தில் கல்லூரிகளுக்கு உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் நிரவல் பெற்றன. அங்கு மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) வழியாக உதவிப் பேராசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். முறையான விளம்பரம் கொடுக்கப் பட்டது. பின்னர், விண்ணப்பித்தவர்களுக்கு டெல்லியில் நேர்காணல் நடந்தது. சடங்கு நேர்காணலாகவோ வழிப்பறி நேர்காணலாகவோ அல்லாமல் முழுமையாக உதவிப் பேராசிரியர் பணியிடத்துக்கு வந்தவர்களின் தகுதி, திறன், அறிவு, பாட நுணுக்கம், பயிற்று நுணுக்கம் என எல்லாம் பணிவோடும் அனுசரணையோடும் நடத்தப் பட்டது. நேர்முகத் தேர்வுக் குழு உறுப்பினர் கள் தங்கள் மேதைமையைக் காட்டி அச்சுறுத்துவதுபோல் நடந்துகொள்ளாமல் இயல்பாக நடந்துகொண்டார்கள். நேர்முகத் தேர்வுக்குரிய போக்குவரத்துக் கட்டணத்தையும் யுபிஎஸ்சி வழங்கியது.

பேராசிரியர் பணி நியமனங்களை இப்படி முறையாக நடத்தினால்தானே, அவர்கள் பணியாற்றும் துறைக்கும் கல்லூரிக்கும் பல்கலைக்கழகத்துக்கும் மாணவர்களுக்கும் நாட்டுக்கும் உண்மையாகவும் அர்ப்பணிப்புடனும் இருக்க வேண்டும் என்று அவர்களின் மனசாட்சி அவர்களை ஊக்குவிக்கும்.tamil-nadu-open-university-tnou-building

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here